Apr 10, 2018

பேசாத வார்த்தைகள் : 04-2018




தண்ணீர் தட்டுப்பாடு , தண்ணீர்ப் போர் வருவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைய பிரச்னை தண்ணீர் கலப்படம். இரண்டு நாளுக்கு முன் வாட்சப்பில் வந்த ஒரு சலனப்படத்தில் , மினரல் வாட்டரில் கால்சியமே இல்லை , பாருங்கள் என்று குண்டு பல்பை வைத்து குண்டு போட்டார்கள். சமீபத்திய இந்து பத்திரிக்கையின் நடுப்பக்கத்திலும் , தலையங்கத்திலும் தண்ணீர்க் கலப்படத்தை பற்றி கவலைப்பட்டிருந்தார்கள். கண்ணுக்கு புலப்படாத ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் நாம் குடிக்கும் தண்ணீரில் கலந்திருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்களாம் . எந்த நம்பிக்கையில் குழந்தை , குட்டிகளை பெற்று வைத்திருக்கிறோம் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் மழை பெய்தால் , ரோட்டில் மண்ணும் , சகதியும் படிந்திருக்கும். ஆனால் இப்பொழுது பிளாஸ்டிக் கவர் தான் பறந்து , பரந்து படிந்திருக்கிறது. வரும் காலத்தில் பிளாஸ்டிக் மழையே பெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கையை வீசிக்கொண்டு கடைகளுக்கு  செல்வதற்குப்பதில் , கட்டைப்பையை தூக்கிக்கொண்டு போனாலே போதும் நாட்டின் பாதி பாலிதீன்களை ஒழித்துவிடலாம். ஆனால் நம்முடைய அலட்சியமும் , சோம்பேறித்தனமும் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சூரியனார் ஃபுல் பாஃர்மிற்கு வந்துவிட்டார். அதிகாலையில் , பச்சைத்தண்ணீரில் குளித்துக்கொண்டிருக்கும்போதே வியர்த்து கொட்டுகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு இரண்டுமணி நேரம் நண்பகலில் டூ வீலரில் சுற்றி வீட்டிற்கு வந்தேன் , அடுத்த நான்குமணி நேரத்திற்கு உலகமே சுற்றிவிட்டது. “ஹீட் ஸ்ட்ரோக்” என்கிற வார்த்தையை சர்வ சாதரணமாக கேட்கமுடிகிறது . அடுத்த இரண்டு , மூன்று மாதத்திற்கு சூதானமாக இருந்துகொள்ளவேண்டும் , இல்லையேல் பஸ்பம்தான். வெயிலுக்கு இதமாக இருக்குமே என்று இளநீர் குடித்தால் , அன்னிச்சை செயலாக கண் இளநீர்க்காரரின் கையை நோக்குகிறது. அருவி எஃபெக்ட். சரி சல்லிசாக கிடைக்கும் தர்பூசணியை சாப்பிடலாமென்றால் தர்பூசணியில் கெமிக்கல் , இன்ஜெக்சன் என்று சித்தமருத்துவர் சிவராமன் பீதியைக்கிளப்புகிறார். எல்லா பக்கமும் முட்டு சந்தாகவே இருந்தால் எங்கதான் போறது யுவர் ஆனர்...!!??
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சார்லி மற்றுமொரு ஃபீல் குட் மலையாளப்படம். 






பேஃஸ்புக் குரூப்பில் சிலாகிக்கப்பட்டிருந்த சார்லியை பார்த்தேன் , பார்க்கிறேன் . பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நேற்றையைப் பற்றிய கவலையும், நாளையப் பற்றிய பயமும் இல்லாமல் அன்றைய, அப்போதைய நிமிடத்தை அனுபவிக்கும் தேசாந்தரி சார்லியாக துல்கர். முன்பின் தெரியாதவர்களுக்கு, தேவைப்படும் நேரத்தில் தக்க உதவிகளைச் செய்து சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷப்படுத்தி , சலனமில்லாமல் அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறார் . துல்கருக்கு அந்தத் தாடி ஆப்டாக இல்லை . மற்றபடி மனுஷன் நடிப்பில் குறைவைக்கவில்லை. இந்த கதாபாத்திரத்தில் பஹத் நடித்திருந்தால் இன்னும் பெட்டரா இருந்திருக்குமே என்றொரு எண்ணம் வந்துபோனது. சமீபமாக பஹத் பித்து பிடித்தாட்டுகிறது. 

வேலை , வீடு , பேஃஸ்புக் , வாட்சப் என்று செட்யூல்டு வாழ்கையை வெறுத்து , புதிய மனிதர்களையும் , இடங்களையும்  கலையையும் தேடித்தேடி நகரும் டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தில் பார்வதி. பார்வையாளனின் மொத்த பார்வையையும் ஒத்தை ஆளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார் பாவை பார்வதி. என்ட மோளே என்னா நடிப்பும்மா ...! தடித்த பிரேம் கொண்ட மூக்குக்கண்ணாடி , பாதி வெட்டப்பட்டு காற்றில் கவிதை  வரையும்  கேசம் , ரிலாக்ஸ்டான ட்ரெஸ்சிங் , பெரிய சைஸ் மூக்குத்தி என்று  டெஸ்சாவின் அவுட்லுக் அட்டகாசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அரை இன்ச் போல்டு சைசிற்கு இருக்கும் மூக்குத்தி மற்ற நடிகைகளுக்கு எந்த அளவிற்கு பொருந்தும் என்று தெரியவில்லை. சமீபத்தில் வந்த விக்ரம் வேதாவில் மாதவன் ஜோடியாக நடித்திருந்த ....ஸ்ரீநாத் “இருக்கு ஆனா இல்லை” என்பதுபோல  மெல்லியதாக மூக்குத்தி அணிந்திருப்பார்  அதைத்தவிர வேறெந்த நடிகையும் மூக்குத்தி அணிந்திருந்ததாக தெரியவில்லை. தர்ஷினிக்கு மூக்குத்தி அணிவிக்கவேண்டுமேன்று ஆசையுண்டு .அதற்கு முன்பாக காது குத்தவேண்டும்.

பிரதான கதாபாத்திரங்களின் சித்தரிப்பு , தமிழில் வெளிவந்த “180” ரூல்ஸ் கிடையாது என்ற படத்தினை நினைவுபடுத்துகிறது. சார்லி தங்கிச் சென்ற அறைக்கு குடிவரும் டெஸ்ஸா , காமிக்ஸ் போன்று வரையப்பட்ட ஒரு ஓவியத்தொகுப்பினை காண்கிறார். அந்த ஓவியம் ஒரு கதையைச் சொல்லி, பாதியோடு நிற்கிறது . கதையின் மீதியையும்,  சார்லியையும்  தேடி புறப்படும் டெஸ்ஷாவின் பயணமே மீதிப்படம். திருடன் , படகோட்டி, குஞ்சப்பன் , கனி என்று அனைத்து கதாபாத்திரங்களுமே கச்சிதம் . பத்ரோஸ் , குயின்மேரி எபிசோடு ஒரு துயரக் கவிதை .

ஓவியம் தொடர்பான காட்சிகள் வரும் போதெல்லாம் ஒலிக்கும் பின்னணி இசை பிரமாதம்.கோபி சுந்தரின் இசை கொடி கட்டிப் பறக்கிறது . மால்குடி சுபாவின் அமர்க்களமான குரலில் ஒலிக்கும் “அகலே யாரோ பாடும் பாடல்” கேட்பதற்கு ஆஹா...!!! .விஷூவல்ஸ் வாவ்.!!! சக்திஸ்ரீகோபாலனின் “புலரிகளோ” சுகம். மேற்படி பாடலின் ஆரம்பத்திலும் , இடையிடையேயும் ஒலிக்கும் இஸ்லாமிய சேர்ந்திசை கேட்பவர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்குகிறது. ஸ்ரேயாகோஷலின் “புதுமழை” – ஜன்னலோர சாரல்.
 
துல்கரின் அறை , அந்த ஸ்கூட்டர் ஓவியம் , மரப்படகு , சோமபானம் விற்பனை நடக்கும் வீட்டின் வெளிப்புறம் என்று படத்தில் அட போடவைக்கும் அஃறிணைகள் அதிகதிகம். ஆர்ட் டைரக்டருக்கு பூச்செண்டல்ல ஆளுயர மாலையே கொடுக்கலாம். படம் எடுக்கப்பட இடங்களுக்கு போக வேண்டுமென்ற எண்ணத்தினை அநேகக் காட்சிகள் , பார்வையாளருக்கு அன்னிச்சையாக ஏற்படுத்துவது ஒளிப்பதிவிற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

செல்போன் சிம்மை உடைத்து விட்டு தோழியிடம் பழிப்புக் காட்டுவது , புலரிகளோ பாடலில் வரும் தலையாட்டி பொம்மையின் அசைவிற்கேற்ப ஆடுவது , பூரம் திருவிழாவில் துல்கரிடம் தான் டெஸ்ஸா இல்லை என்று சொல்லி , அவரின் ஏமாற்றத்தை ஓரக்கண்ணால் ரசிப்பது என்று பல காட்சிகளில் பரவசப்படுத்துகிறார் பார்வதி. டேக் ஆஃபின் சமீராவே இன்னும் நினைவுகளை விடு அகலவில்லை. கூடுதலாக இப்பொழுது டெஸ்சாவும். பார்வதியின் மேஜிக்கை அனுபவிப்பதற்காகவே இன்னுமொருமுறை படத்தை பார்க்கவேண்டும். குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் தமிழ் வசனங்களும் , பார்வதி , துல்கரின் முகபாவங்களும் பால்பாயச முந்திரி. 

சார்லியில் வரும் எந்தவொரு முதன்மைக்  கதாபாத்திரங்களோடும் உங்களைப் பொருத்திக்கொள்ள முடியாது . அப்படியான கதாபாத்திரங்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பதற்கான சாத்தியமும் சொற்பமே. ஆனாலும் படம் உள்ளுக்குள் ஊடுருவுகிறது.

 என்றென்றும் புன்னகையுடன்
 ஜீவன்சுப்பு.